Saturday, July 31, 2004

தந்தையும் மகவும்

இந்த வார விகடனில் சத்யப்ரியன் எழுதிய "மொழியாக்கம்" என்ற சிறுகதை தந்தை மகனுக்கிடையே உள்ள உறவையும் பாசப்பிணைப்பையும் மகனுக்கு தந்தை மேல் இருக்கும் ஒரு விதமான ஹீரோ வொர்ஷிப்பையும் மிக நேர்த்தியாக விவரித்திருக்கிறது. இதே போன்ற உறவை "நேசமுடன்" வெங்கடேஷ் எழுதிய "அப்பாவும் மகனும்" என்ற கட்டுரையும் அழகாக காட்டுகிறது. இவற்றை படிக்கும்போது, மிகச்சிறிய வயதில் தந்தையை இழந்து விட்ட எனக்கு ஒரு வித மன அழுத்தமும், ஏதோ ஒன்றை இழந்து விட்ட உணர்வும் ஏற்படுகிறது.

எனக்கென்னவோ தந்தையில்லாத சூழ்நிலையில் வளர்ந்தவர்களுக்கு ஒரு நல்ல தந்தை எப்படி இருக்க வேண்டும் என்கிற பாடம் கிடைக்காமல் போய் விடுகிற காரணத்தினால் பிற்காலத்தில் அவர்கள் குழந்தை வளர்ப்பில் குறைபாடுகள் இருக்க சாத்தியங்கள் இருப்பதாகவே தோன்றுகிறுது.

அதே நேரம், ஒரு நற்குணமற்ற தந்தையால் வளர்க்கப்படுவதை விட தந்தையில்லாத சூழலே (தாய் மட்டும்) ஒரு குழந்தைக்கு சிறந்தது. பல எதிர்கால குற்றவாளிகள் கொடுமைக்கார அப்பாக்களால் தான் உருவாக்கப்படுகின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை. நான் என் மகள்களுக்கு ஒரு நல்ல அப்பாவாகவும், முன்மாதிரியாகவும் இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் என் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்பதில் மிக கவனமாக இருக்கிறேன்.


1 மறுமொழிகள்:

Chandravathanaa said...

///எனக்கென்னவோ தந்தையில்லாத சூழ்நிலையில் வளர்ந்தவர்களுக்கு ஒரு நல்ல தந்தை எப்படி இருக்க வேண்டும் என்கிற பாடம் கிடைக்காமல் போய் விடுகிற காரணத்தினால் பிற்காலத்தில் அவர்கள் குழந்தை வளர்ப்பில் குறைபாடுகள் இருக்க சாத்தியங்கள் இருப்பதாகவே தோன்றுகிறுத///

இதை நான் என்னைச் சுற்றியுள்ள சில தந்தையரில் பார்த்தேன். அவர்களுக்கு ஒரு தந்தை எப்படி இருக்க வேண்டுமென்பது தெரியாமற் போகிறது.
தந்தையின் அந்த நிலையை பிள்ளைகளும் உணர்ந்து நடக்கும் போது பிரச்சனைகள் சுமூகமாகலாம். ஆனாலும் பிள்ளைகள் உணர்ந்து நடந்து கொள்ளும் வயது வருவதற்கிடையில் பல உள ரீதியான பிரச்சனைகள் ஏற்பட்டு விடுகின்றன.
உங்கள் பதிவு மனதைத் தொடுவதாக உள்ளது.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails